கோலாலம்பூர், ஜூன் 10 - போலந்தில் தயாரிக்கப்பட்ட இராணுவ தளவாடங்களை மலேசியா நீண்டகாலமாகப் பயன்படுத்தி வருவதை மேற்கோள் காட்டிய போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா, இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மலேசிய ஆயுதப்படைகள் பல ஆண்டுகளாக போலந்தில் தயாரிக்கப்பட்ட, குறிப்பாக பாதுகாப்பு நிறுவனமான டபள்யு.பி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் டாங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை பயன்படுத்தி வருகின்றன என்று அவர் கூறினார்.
போலந்து தனது பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்று போர்சுக் காலாட்படை சண்டை வாகனமாகும். இது முக்கிய ஏற்றுமதி தயாரிப்பாக மாறும் எனத் தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
போலந்தின் பாதுகாப்புத் துறையில் அதிக வாய்ப்புகளை ஆராயுமாறு மலேசியாவை வலியுறுத்திய டுடா, ஐரோப்பாவின் சிறந்த இராணுவ வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றான கீல்ஸில் நடைபெறும் அனைத்துலக பாதுகாப்பு தொழில் கண்காட்சியில் பங்கேற்கும்படி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
போலந்தின் பாதுகாப்பு தொடர்பான முழு விபரங்களையும் அவர்கள் காண முடியும். அனைத்து முக்கிய ஆயுத உற்பத்தியாளர்களும் அதில் பங்கேற்கிறார்கள். மேலும் எங்கள் துறையும் விரிவடைந்து வருகிறது என்று அவர் கூறினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபராகப் பதவியேற்ற டுடா, மலேசியாவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் போலந்து கடந்தாண்டு மலேசியாவின் எட்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. மொத்த இருதரப்பு வர்த்தகம் 2023 ஆண்டுடன் ஒப்பிடும்போது 19.5 சதவீதம் அதிகரித்து 566 கோடி வெள்ளியாகப் பதிவானது.
மலேசியா போலந்திற்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய பொருட்களில் மின்சாரம் மற்றும் மின்னியல் பொருட்கள், ரப்பர் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் அடங்கும். அதே நேரத்தில் போலந்திலிருந்து இயந்திரங்கள், உபகரணங்கள், மின்சாரம் மற்றும் மின்னியல் பொருட்கள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.


