ஈப்போ, ஜூன் 10 - சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழக (உப்ஸி ) மாணவர்களில் 15 பேரின் உயிரைப் பறித்த கோர விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியதும் அவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை காவல் துறையினர் பெறுவர்.
நாற்பது வயதான அந்த ஓட்டுநர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி மேல் நடவடிக்கைக்காக இரசாயனத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
தற்போது அவர் (பேருந்து ஓட்டுநர்) தைப்பிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டவுடன் நாங்கள் அவரை ரிமாண்ட் செய்வோம் என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
கிரீக், கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தின் போது அந்த வாடகைப் பேருந்து திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.
நேற்று ஈப்போவின் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட 13 பேரின் உடல்களும் இன்று அதிகாலை 3.00 மணியளவில் திரங்கானு, கெர்த்தே, ஹடாரி மசூதிக்கு கொண்டுவரப்பட்டதாக நூர் ஹிஸாம் கூறினார்.


