ஷா ஆலம், ஜூன் 10 - சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழக (உப்ஸி) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கிரிக், தாசேக் பாண்டிங் அருகே நேற்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணை இன்னும் தொடக்கக் கட்டத்தில் உள்ளது.
பதினைந்து உயிர்களைப் பலிகொண்ட அந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை முடிவு செய்வதற்கு தமது தரப்புக்கு இன்னும் காலம் கனியவில்லை என்று தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
முதலில் விசாரணை நடக்கட்டும். அதன் பிறகு விசாரணையின் முடிவுகளை அறிவிப்போம். இச்சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை அறிவிப்பதற்கான தருணம் இன்னும் வரவில்லை என்று அவர் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள அரச மலேசிய போலீஸ்படை கல்லூரியில் நடைபெற்ற மலேசிய ஓய்வுபெற்ற மூத்த காவல் அதிகாரிகள் சங்கத்தின் (ரெஸ்பா) 41வது ஆண்டு பொதுக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விபத்து குறித்து முழுமையாக விசாரிக்க காவல்துறை ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளதாக ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன.
விபத்து குறித்து முழுமையாக விசாரிப்பதற்கு காவல்துறை ஒரு சிறப்புப் பணிக்குழுவை உருவாக்கும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி தெரிவித்திருந்தார்.
சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், சாலைப் போக்குவரத்துத் துறை, தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


