சிப்பாங், ஜூன் 9 — மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா நேற்று மலேசியா வந்தடைந்தார். அவரை ஏற்றி வந்த சிறப்பு விமானம் நேற்றிரவு 8.21 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா ராயா வளாகத்தில் தரையிறங்கியது.
ஆகஸ்ட் 2015இல் பதவியேற்ற பிறகு போலந்து அதிபர் மலேசியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த அதிகாரப்பூர்வப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
போலந்து ஜனாதிபதிக்கு இன்று புத்ராஜெயாவின் பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறும்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்புத் தொழில், விவசாயம், ஹலால் துறை மற்றும் விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டுடா மற்றும் அவரது குழுவினரை கௌரவிக்கும் வகையில் ஶ்ரீ பெர்டானா வளாகத்தில் அன்வார் அதிகாரப்பூர்வ மதிய விருந்தை வழங்குவார்.
— பெர்னாமா


