ஷா ஆலம், ஜூன் 10 - சிலாங்கூர் மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச சுகாதார பரிசோதனை இயக்கம் ஜூன் மாதம் முழுவதும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.
வரும் சனிக்கிழமை கோல சிலாங்கூரில் உள்ள ஹாஜி ஒமர் புக்கிட் டேவான் பெலிம்பிங்கில் நடைபெறும் சிலாங்கூர் சாரிங் பரிசோதனை இயக்கத்தில் கலந்துகொள்ளுமாறு சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த 'சிலாங்கூர் சாரிங்' நிகழ்வுக்கு வருகை தந்து பொதுவான உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண் மற்றும் பல் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
செலங்கா செயலி வாயிலாக பரிசோதனைக்கு முன்பதிவு செய்யும்படி பங்கேற்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தனி நபர் இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த மருத்துவப் பரிசோதனைச் சேவை வழங்கப்படும். ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் செல்கேர் ஹாட்லைனை 1-800-22-6600 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு
2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு 7,000 பேர் பயனடைந்ததாகவும் அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


