கோலாலம்பூர், ஜூன் 10 — இன்று இரவு 9 மணிக்கு புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் மலேசியாவிற்கும் வியாட்னாமிற்கும் இடையே 2027 ஆசிய கோப்பை தகுதிச் சுற்று கால்பந்து போட்டி நடைபெறும். இதில் சுமார் 60,000 கால்பந்து ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 5.30 மணி அளவில் அனைத்து மைதான நுழைவாயில்கள் திறக்கப்படும். தடைசெய்யப்பட்ட பொருட்களை பார்வையாளர்கள் மைதானத்திற்குள் கொண்டு வருவதைத் தடுக்க பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் செராஸ் துணை மாவட்ட காவல்துறைத் தலைவர் ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட பொருட்களில் பட்டாசுகள், தலைக்கவசங்கள், லேசர் பேனாக்கள், கூர்மையான பொருட்கள், ஆபத்தான ஆயுதங்கள், மதுபானம், குடைகள், குச்சிகள், பவர் பேங்குகள், தண்ணீர் பாட்டில்கள், ஐஸ் கட்டிகள், லைட்டர்கள், தீப்பெட்டிகள், சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள், ட்ரோன்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் டிரம்கள் (மலேசிய கால்பந்து லீக்கின் அனுமதியின்றி) ஆகியவை அடங்கும்.
"சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள் புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்திற்கு வர பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும், சாலை பயணிகள் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதி வழியாகச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
"பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும், சாலையில் பொறுமையாக இருக்கவும், வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும்," என்று ரிட்சுவான் காலிட் தெரிவித்தார்.
கால்பந்து போட்டியின் போது அல்லது அதற்குப் பிறகு குழப்பம் மற்றும் கலவரம் ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு குழு அல்லது தனிநபர் மீதும் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.
“மேல் தகவல்களுக்கு கோலாலம்பூர் காவல்துறை 03-2115 9999 அல்லது செராஸ் காவல்துறையை 03-9284 5050/5051 தொடர்பு கொள்ளவும். அதுமட்டுமில்லாமல், அருகிலுள்ள எந்த காவல் நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.
— பெர்னாமா


