கோலாலம்பூர், ஜூன் 10 - "முக்கோணக்கதைகள்" எனும் இலக்கிய விழா, இம்மாதம் ஜூன் முதலாம் தேதி கோலாலம்பூர், YMCA மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா இலக்கியங்களின் வழி இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும் முன்னோடி முயற்சியாக ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ், சீனம் மற்றும் மலாய் ஆகிய மும்மொழி இலக்கியங்களுக்கு இடையிலான உரையாடலாகவும், எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடலாகவும் இவ்விழா வடிவமைக்கப்பட்டது.
"முக்கோணக்கதைகள்" எனும் இலக்கிய விழாவில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், அதனையொட்டி கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது.
மலாய் எழுத்தாளர் எஸ்.எம். ஷாகீரினின் 10 கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு "விண்ணிலிருந்து விழுந்த பெண்" எனும் தலைப்பில் தமிழில் எழுத்தாளர் அ. பாண்டியன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது.
அதோடு, சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட "செல்சி நீலம்" எனும் சிறுகதை தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு கண்டது.
மேலும், மலேசிய தமிழர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் பத்து கதைகள் கொண்ட சிறுகதை தொகுப்பு ஒன்று மலாய் மொழியில் ச.சரவணன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு கண்டது.
இதுவரை, வல்லினம் இலக்கிய அமைப்பு செய்து வந்த மொழியாக்க முயற்சிகளின் வெற்றியாக இவ்விழா அமைந்திருப்பதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ம. நவீன் கூறினார்.
"மலேசியாவில் மொழிப்பெயர்ப்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் குறைவு என்று நான் நினைக்கின்றேன். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில். குறிப்பாக, தமிழ் இலக்கிய சூழலில் மலேசியாவில் மொழிப்பெயர்ப்பு துறை வளர வேண்டும். அப்பொழுதுதான் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகுவர்", என்றார் அவர்.
இம்முயற்சி மகத்தான நோக்கத்தை அடிப்படையாக கொண்டிருப்பதாகவும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை உருவாக்க அவசியம் என்றும் Myskills அறவாரியத்தின் தோற்றுநர் சி.பசுபதியும், பெண் மலேசியாவின் தலைவி மஹி ராமகிருஷ்ணனும் கூறினர்.


