(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 10 - தெராத்தாய் சட்டமன்றத் தொகுதியிலுள்ள எட்டு
ஆலயங்கள் மற்றும் ஒரு ஷீர்டி சாய்பாபா மையத்திற்கு தொகுதி
சட்டமன்ற சேவை மையத்தின் சார்பாக இவ்வாண்டு தலா 5,000 வெள்ளி
மானியமாக வழங்கப்படுகிறது.
கம்போங் பெர்மாய் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம், தாமான் மெகா ஜெயா,
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், புக்கிட் பாண்டான் ஸ்ரீ மலை விநாயகர்
ஆலயம், பாண்டான் பெர்டானா மகா ராஜ கணபதி ஆலயம், ஸ்ரீ
துவாரகமை ஷீர்டி சாய் பாபா மையம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு
இந்த மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளில்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இயோ ஜியா ஹவுர் நேரில் கலந்து இந்த
மானியத்தை ஒப்படைத்ததாக தெராத்தாய் தொகுதி இந்திய சமூகத்
தலைவர் கி.சரஸ்வதி கூறினார்.
தேவைப்படும் ஆவணங்களை முறையாக வழங்கிய இந்த ஐந்து
வழிபாட்டுத் தலங்களுக்கு மானியம் பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் எஞ்சிய
வழிபாட்டுத் தலங்களிடமிருந்து ஆவணங்கள் முழுமையாகக் கிடைத்தப்
பின்னர் அவற்றுக்கும் மானியம் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
இத்தொகுதியிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு கடந்த காலங்களில்
சட்டமன்ற உறுப்பினர் மானியத்திலிருந்து 1,000 வெள்ளி முதல 2,000
வெள்ளி வரை மட்டுமே மானியம் வழங்கப்பட்டு வந்தது. எனினும், இந்த
தொகுதியில் தமிழ்ப்பள்ளிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அதற்கு
மாற்றாக ஆலயங்களுக்கான மானியத்தை உயர்த்தும்படி நானும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர்.மோகன்ராஜும் சட்டமன்ற
உறுப்பினரிடம் வலியுறுத்தியிருந்தோம்.
எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் இயோ,
மானியத்தை தலா 5,000 வெள்ளியாக அதிகரிப்பதற்கு இணக்கம்
தெரிவித்தார் என சரஸ்வதி குறிப்பிட்டார்.
தங்கள் கோரிக்கையை ஏற்று ஆலயங்களுக்கு மானியத் தொகையை
உயர்த்தித் தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக்
கொள்வதாகக் கூறிய அவர், மானியத்தை பெறுவதற்கு ஏதுவாக
ஆவணங்களை விரைந்து வழங்கும்படி எஞ்சிய ஆலய நிர்வாகத்தினரை
கேட்டுக் கொண்டார்.


