கோலாலம்பூர், ஜூன் 10 - தலைநகர், செராஸில் உள்ள ஆலம் ஷா அறிவியல் இடைநிலைப் பள்ளியின் நிர்வாக கட்டிடம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.
இந்த தீச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகக் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையம் ஓர் அறிக்கையில் கூறியது.
அந்த அழைப்பைத் தொடர்ந்து பண்டார் துன் ரசாக், ஜாலான் ஹாங் துவா, செராஸ் மற்றும் செந்தூல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 44 தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஏழு தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தில் ஆசிரியர் அறை, கூட்ட அறை, பதிவேடுகள் அறை, ஆய்வகம் மற்றும் பிற அலுவலகங்கள் உட்பட பல வசதிகள் இருந்தன.
தீயணைப்பு வீரர்கள் காலை 5.08 மணிக்குள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த வேளையில் காலை 6.18 மணிக்குள் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதம் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.


