கோலாலம்பூர், ஜூன் 10 - கிரிக் பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவும் நோக்கத்தில் தலா ஒரு பணியாளரை உப்சி நியமித்துள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு ஓர் ஊழியர் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உப்சி துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முஹமட் அமின் முஹமட் தாஃவ் தெரிவித்தார்.
"தங்குமிட உதவி, நிதி உதவி மற்றும் நலன் பாதுகாப்பு உட்பட பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு செயல்பாட்டு அறையை நாங்கள் தொடங்கியுள்ளோம்", என்று ஈப்போவில் உள்ள ராஜா பெர்மாய்சுரி பைனூன் மருத்துவமனையின் தடயவியல் துறை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.
செயல்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்து குறித்த தகவல் தெரிந்தவர்கள் 05-450 7148 (அலுவலகம்) அல்லது 019-571 9977 எனும் எண்களின் வழி தொடர்பு கொள்ளுமாறு, உப்சியின் நிர்வாக தொடர்பு பிரிவு கேட்டுக் கொண்டது.
மேலும், திரங்கானுவிலிருந்து பேராக் தஞ்சோங் மாலிமில் அமைந்துள்ள உப்சி பல்கலைகழகத்திற்கு விடுமுறை முடிந்து திரும்புவதற்காக விபத்துக்குள்ளான பேருந்து மாணவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என பேராக் காவல்துறை தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
பெர்னாமா


