பாலிங், ஜூன் 10 - தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழக (உப்ஸி) மாணவர்கள் சம்பந்தப்பட்ட கோர பேருந்து விபத்தில் சிக்கிய பெரோடுவா அல்ஸா பல்நோக்கு வாகனத்தின் (எம்பிவி) ஓட்டுநரின் மனைவி மற்றும் அவர்களின் ஆறு வயது மகள் ஆகியோர் பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பத்தாறு வயதான நூருல் ஐன் ஜக்காரியா மற்றும் 6 வயதான நூர் ஐஸ்யா நபிஷா முகமட் லுட்ஃபி ஆகியோரின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதோடு தொடர் சிகிச்சைக்காக எலும்பியல் துறைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று கெடா மாநில வீட்டுவசதி, ஊராட்சித்துறை மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் மன்சோர் ஜக்காரியா கூறினார்.
சம்பந்தப்பட்ட எம்.பி.வி. வாகனத்தின் ஓட்டுநரான நூருல் ஐனின் கணவர் முகமட் லுட்ஃபி ரட்ஸி (வயது 37), இளைய குழந்தை முஹம்மது அஹ்சன் நஃபிஸ் (வயது 2) ஆகியோர் சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்ற வாடகைப் பேருந்து கவிழ்ந்து பெரோடுவா அல்ஸா வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.


