கோலாலம்பூர், ஜூன் 10 - கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 53வது கிலோ மீட்டரில் கிரிக், தாசேக் பாண்டிங் அருகே நேற்று காலை சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநருக்கு தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (அபாட்) காரணம் கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளது.
அதே நேரத்தில், 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டு தரைப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பேருந்து மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பாதுகாப்பு ஆய்வு மற்றும் தணிக்கையை சாலைப் போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே.)
நடத்தி வருவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
விசாரணை முடிந்ததும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். பறிபோன ஒவ்வொரு உயிரும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும் என்று அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு தரங்களை பின்பற்றாத கனரக வாகனங்களால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து சாலையைப் பயன்படுத்துவோரைப் பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்து சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
கனரக வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகளை கட்டாயமாக அமல்படுத்துவது வகுக்கப்பட்டு வரும் கொள்கைகளில் ஒன்றாகும்.
உயிர்களைப் பாதுகாப்பதில் எந்த சமரசமும் இருக்க முடியாது என்பதை இந்த துயரச் சம்பவம் நினைவூட்ட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்ட அவர், குடும்ப உறவினர்களுக்கு உதவிய உயர்கல்வி அமைச்சு மற்றும் உப்ஸி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.
நள்ளிரவு 12.30 மணிக்கும் அதிகாலை 1.00 மணிக்கும் இடையே நிகழ்ந்த இந்த விபத்தில் திரங்கானுவின் ஜெர்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நோக்கிச் சென்ற வாடகைப் பேருந்து கவிழ்ந்து பெரோடுவா அல்சா மீது மோதியது.
இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர், பெரோடுவா அல்சாவின் ஓட்டுநர் மற்றும் மூன்று பயணிகள் உட்பட 33 பேர் காயமடைந்தனர்.


