புத்ராஜெயா, ஜூன் 9 - தற்போது Tabung Kasih@HAWANA நிதியுதவி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 405 ஊடகவியலாளர்கள் உதவிப் பெற்றுள்ளனர். இத்திட்டம் 2023ஆம் ஆண்டு தேசிய ஊடகவியலாளர்கள் தினக் கொண்டாட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு முறை மட்டும் வழங்கப்படும் நிதியுதவியைத் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கக்கூடிய கூடுதல் உதவிகளையும் தமது தரப்பு ஆராயும் என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"ஜூன் 14-ஆம் தேதி கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெறவிருக்கும் ஹவானா கொண்டாட்டத்தில் இன்னும் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு உதவ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக உதவிப் பெற்றவர்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை வழங்குவதற்கு நாங்கள் ஆய்வை மேற்கொள்வோம்," என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் News Straits Times நாளிதழின் புகைப்படக் கலைஞர் இக்வான் முனிரிடம் Tabung Kasih@Hawana நிதியுதவியை வழங்கியப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
கடந்த மே 27-ஆம் தேதி குடல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட 50 வயது இக்வான் முனிரை ஃபஹ்மி நலம் விசாரித்தார்.
--பெர்னாமா


