கிரிக், ஜூன் 9 - கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க அரச மலேசிய போலீஸ் படை ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும்.
மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகம், சாலைப் போக்குவரத்து இலாகா, தரைப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து இந்த சம்பவம் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவதற்கு ஏதுவாக விசாரணை அறிக்கையை விரைவில் முடிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.
பேருந்து ஓட்டுநரின் போக்குவரத்து வரலாறு, தனிப்பட்ட பின்னணி, கடந்த கால நடவடிக்கைகள் மற்றும் பணித்தன்மை உட்பட அனைத்து கோணங்களிலும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் இன்று கிரிக் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேராக்கின் கிரிக்கிலிருந்து சுமார் 57 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாசேக் பண்டிங் அருகே கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் பானுனில் நிகழ்ந்த பேருந்து மற்றும் பல்நோக்கு வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் 15 உப்ஸி மாணவர்கள் கொல்லப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் முன்னதாகக் கூறியிருந்தார்.
அந்தப் பேருந்தில் 21 முதல் 23 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் 34 பெண்கள் உள்பட 42 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் கிழக்கு கரை மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.


