கிரீக், ஜூன் 9 - தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வி
பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில்
சிக்கி கவிழ்வதற்கு முன்னர் முன்னாள் சென்று கொண்டிருந்த அல்ஸா ரக
பல்நோக்கு வாகனத்தை மோதியது தொடக்க க் கட்ட விசாரணையில்
தெரிய வந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த போது அந்த பேருந்து 21 முதல் 23 வயதுக்குட்பட்ட எட்டு
மாணவர்கள் மற்றும் 32 மாணவிகள் உள்பட 42 பேருடன் கிழக்கு கரை
மாநிலத்திலிருந்து பயணம் மேற்கொண்டதாக பேராக் மாநில போலீஸ்
தலைவர் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் கூறினார்.
கெடா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த பேருந்து மாணவர்களை
ஏற்றி வருவதற்காக பிரத்தியேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும்
அது இரவு 9.00 மணியளவில் திரங்கானு, ஜெர்த்தேவிலிருந்து புறப்பட்டு
தஞ்சோங் மாலிம் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து
கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த பேருந்து கிழக்கு-மேற்கு சாலையின் 53வது கிலோ மீட்டரில் கிரீக்,
தாசேக் பாண்டிங் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15
மாணவர்கள் உயிரிழந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
பதிமூன்று மாணவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெரம்புவான் பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட
வேளையில் இருவரின் உடல்கள் கிரீக் மருத்துவமனையில்
சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
இந்த விபத்தில் 23 மாணவிகள் மற்றும் நான்கு மாணவர்கள் உள்பட 27
பேர் காயங்களுக்குள்ளாயினர். 40 வயதுடைய ஓட்டுநரும் 44 வயது
உதவியாளரும் இந்த விபத்தில் காயமடைந்தனர் என்று பேராக் மாநிலப் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர்
தெரிவித்தார்.
அல்ஸா ரக காரில் பயணித்த 37 மற்றும் 36 வயதுடைய தம்பதியர்,
அவர்களின் இரு பிள்ளைகளும் இந்த விபத்தில் காயங்களுக்குள்ளாகி
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்
அவர்.


