ஷா ஆலம், ஜூன் 9 - இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழக உப்ஸி) மாணவர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி பெசார் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
15 மாணவர்களைப் பலி கொண்ட அந்த கோர விபத்தில் சிலாங்கூரைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய நிலைமையை மாநில அரசு கண்காணித்து வருவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
உப்ஸி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்து பற்றிய சோகச் செய்தியைப் பெற்றேன். பாதிக்கப்பட்டவராகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
மாநில அரசு தற்போது நிலைமையைக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக இந்த பேரிடரில் சிலாங்கூர் மாநில மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்று ஆராய்ந்து வருகிறது என அவர் விளக்கினார்.
கிரீக், கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது அந்த பேருந்து 48 மாணவர்களை ஏற்றிக் கொண்டு திரங்கானுவில் உள்ள கெர்த்தே நகரிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிம் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.


