கோலாலம்பூர், ஜூன் 9 - மலேசிய தொலைத் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) புள்ளிவிவர நோக்கங்களுக்காக கைப்பேசிகளின் தரவை கோரியிருப்பதை தொடர்ந்து, வாடிக்கையாளர் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில் வாடிக்கையாளர் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு ஆகியவை தங்களின் முதன்மையான முன்னுரிமைகள் என U Mobile Sdn Bhd அறிக்கையில் ஒன்றில் தெரிவித்தது.
"எனவே வாடிக்கையாளர் தரவு மேலாண்மையில் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டை உறுதிச் செய்து MCMC உடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்" என U Mobile தெரிவித்தது.
மேலும், MCMC-க்கு சமர்ப்பிக்கப்பட்ட கைப்பேசி தரவுகள் பெயர் குறிப்பிடப்படாத வடிவத்தில் உள்ளதோடு அதில் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்த தகவலும் இல்லை என Telekom Malaysia Bhd (TM) தெளிவுபடுத்தியது.
வாடிக்கையாளர் தரவின் நேர்மையை சமரசம் செய்யாமல் அரசாங்க முயற்சிகளை ஆதரிக்க MCMC-யுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதாக CelcomDigi Bhd வெளியிட்ட அறிக்கைக் கூறியது.
இதனிடையே, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பிற்கு தாங்கள் முன்னுரிமை அளிப்பதால், எந்த மட்டத்திலும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை பகிர அணுகல் இல்லை என்று Maxis Bhd தெரிவித்துள்ளது.
அனைத்து தரவுகளும் இரகசியமாக வைக்கப்பட்டு, 2010 தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தை முழுமையாகப் பின்பற்றி பாதுகாப்பான சூழலில் ஒட்டுமொத்தமாக செயலாக்கப்படுவதாக Maxis தெரிவித்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து தரவுகளைச் சேகரிப்பது, தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலையும் அணுகுதல் செயலாக்குதல் அல்லது வெளிப்படுத்துதல் என எதையும் உட்படுத்தவில்லை என்று, MCMC முன்னதாக தெளிவுப்படுத்தியது.
மாறாக ICT எனப்படும் தொலைத்தொடர்பு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரு முக்கியக் அம்சங்களில் சான்றுகள் சார்ந்த கொள்கை உருவாக்கத்தை ஆதரிக்க அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை உருவாக்குவதற்கு மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என MCMC கூறியது.


