கோலாலம்பூர், ஜூன் 9- கிரீக், கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் பானுனில் இன்று அதிகாலை நிகழ்ந்த பேருந்து- எம்.பி.வி. வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் பலியான 15 மாணவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.
தகவல் தொடர்பு அமைச்சின் அனைத்து ஊழியர்கள் சார்பாகவும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், இந்த சம்பவத்தை ஒரு பேரிழப்பு என்று வர்ணித்தார்
இது நிச்சயமாக சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (உபஸி) சமூகத்தில் வேதனையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராக் மாநிலத்தின் கிரீக், தாசேக் பந்திங் அருகே ஜாலான் ஜெலி-கிரீக்கில் இன்று அதிகாலையில் உப்ஸி மாணவர்கள் சம்பந்தப்பட்ட துயர விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
இறந்த 15 மாணவர்களின் குடும்பங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் இன்று காலை முகநூல் மூலம் தெரிவித்தார். காயமடைந்த மற்ற அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் என்றும் அவர் கூறினார்.
உப்ஸி மாணவர்கள் பயணித்த அந்த பேருந்து திரங்கானுவின் கெர்த்தே நகரிலிருந்து பேராக்கின் தஞ்சோங் மாலிம் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.


