கோலாலம்பூர், ஜூன் 9 - ஆண்டுதோறும் ஜூன் 8-ஆம் தேதி உலக மூளைக்கட்டி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகின்றது. மனித உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களில் `Brain Tumor` என்றழைக்கப்படும் மூளைக் கட்டி நோயும் ஒன்றாகும்.
இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ முன்னேற்றங்களை தெரிவிக்கும் வகையில் "Brain Health and Prevention' எனும் கருப்பொருளில் இவ்வாண்டிற்கான உலக மூளைக்கட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது ஓர் உயிர்க்கொல்லி நோய் என்று தெரிந்து வைத்திருக்கும் மக்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து அறிந்திருப்பது குறைவாகவே உள்ளது.
மூளையில் அணுக்கள் அளவுக்கு அதிகமாக வளரும்போது, அவை கட்டிகளாக உருமாறி, மூளைக் கட்டி நோயை ஏற்படுத்துவதாக மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் தலைமை இயக்குனர் டாக்டர் முரளிதரன் முனுசாமி கூறினார்.
"சிலர் இதை மூளை புற்றுநோய் என்று தவறான புரிதலை வைத்திருக்கின்றனர். மூளைக்கட்டிகளில் சில மூளைக்கட்டிகள் தான் புற்றுநோயை சம்பந்தப்பட்டதாக இருக்கும்`,, என்றார் அவர்.
மூளைக்கட்டி நோய், உலகளவில், ஆண்டுக்கு சுமார் 200,000 முதல் 250,000 பேரின் உயிரைப் பறிப்பதாக உலக சுகாதார நிறுவனம், WHO-வின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
ஆனால், மலேசியாவைப் பொருத்தவரை ஒரு லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இந்நோய் ஏற்படுவதாகவும், அதில் 30 விழுக்காட்டினருக்குப் புற்றுநோயாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் தொடங்கி 13 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மூளைக்கட்டிகள் புற்றுநோயாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, டாக்டர் முரளிதரன் விவரித்தார்.
"இது பெரும்பாலும் புதிதாக பிறக்கும் குழந்தைகளில் தொடங்கி ஏறக்குறைய 13 முதல் 14 வயது இருக்கக்கூடிய சிறுவர்களுக்கு வரக்கூடிய மூளைக்கட்டிகள் பெரும்பாலும் புற்றுநோயாக திகழ்ந்துக் கொண்டு வருகின்றன", என்றார் அவர்.
கண் பார்வை குறைவது, காது கேளாமல் போவது, ஞாபக மறதி, மன அழுத்தம், தடுமாற்றம் போன்றவை மூளைக்கட்டி நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று டாக்டர் முரளிதரன் விளக்கினார்.
"ஒன்று பார்வை கோளாறு, தொடர்ச்சியான தலை வலி, மறதி, வாந்தி, ஒருவரின் பேச்சு அல்லது உடல் பாகங்கள் மற்றும் செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நம்மால் பார்க்க முடியும்", என்று அவர் தெரிவித்தார்.


