கோலாலம்பூர், ஜூன் 9 - இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) 15 மாணவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிப் பணிகளை ஒருங்கிணைக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
அடிக்கடி நிகழும் இதுபோன்ற இதயத்தை உருக்கும் பேரிடர்கள், அனைவரும் எப்போதும் கவனமாக இருப்பதற்கும் இலக்கை அடைவதில் அவசரப்படாமல் இருப்பதற்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
உங்கள் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. ஈடுசெய்யவும் முடியாதது என்று அவர் இன்று முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
பிரதமரும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயிலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
இன்று அதிகாலை கிரீக் அருகே நிகழ்ந்த பேருந்து மற்றும் மற்றொரு வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் 15 மாணவர்கள் கொல்லப்பட்ட துயர விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு அஸிசாவும் நானும் மிகவும் வருத்தமடைந்தோம் என்று அவர் கூறினார்.
கிரீக், கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு வாகனத்துடன் மோதி கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது அந்த பேருந்து உப்ஸி மாணவர்களை ஏற்றிக் கொண்டு திரங்கானுவில் உள்ள கெர்த்தே நகரிலிருந்து பேராக், தஞ்சோங் மாலிம் நகருக்குச் சென்று கொண்டிருந்தது.


