ஜோகூர் பாரு, ஜூன் 9 - ஸ்கூடாய், தாமான் துன் அமீனாவில் ஆடவர்
ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரது காரையும் எட்டி
உதைத்து சேதப்படுத்திய சிங்கப்பூர் ஆடவரை போலீசார் விசாரணைக்காக
தடுத்து வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டு ஆடவர் ஒருவரிடமிருந்து நேற்று
மாலை 3.01 மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ஜோகூர் பாரு
உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் மஹிண்டர் சிங்
கூறினார்.
இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் 40 வயது
மதிக்கத்தக்க அந்த ஆடவரை மாலை 6.20 மணியளவில் கைது செய்ததாக
அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை 2.29 மணியளவில் தாம் பி.எம்.டபள்யூ. காரில் தாமான் துன்
அமீனாவில் பயணித்துக் கொண்டிருந்த போது வழியை மறைத்த
சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூர் பதிவ எண்ணைக் கொண்ட டோயோட்டா
அல்டிஸ் காரின் ஓட்டுநர் அடிக்கடி ஹாரனை அழுத்தியதாக பாதிக்கப்பட்ட
நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாகப் பல்வீர் சிங் கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தேகப் பேர்வழி பாதிக்கப்பட்ட நபரின் காரை
எட்டி உதைத்து சேதப்படுத்தியுள்ளார். எனினும், புகார்தாரருக்கு எந்த
காயமும் ஏற்படவில்லை என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கீழறுப்புச் செயலில் ஈடுபட்டதற்காக தண்டனைச் சட்டத்தின் 426வது பிரிவு
மற்றும் தனி மனித கௌரவத்திற்கு குந்தகம் ஏற்படுத்தியதற்காக அதே
சட்டத்தின் 509வது பிரிவின் கீழ் அவ்வாடவரை விசாரிப்பதற்காக இன்று
தடுப்புக் காவல் அனுமதி பெறப்படும் என்றார் அவர்.
இரு ஆடவர்கள் சாலையோரம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் கார்
என்று சேதமடைந்துள்ளதையும் சித்தரிக்கும் காணொளி சமூக ஊடங்களில்
பரவலாகப் பகிரப்பட்டது.


