ஈப்போ, ஜூன் 9 - சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி)
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மற்றொரு காருடன் மோதி
விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இக்கோர விபத்து கிரிக்கிலுள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் பானுன்
எனுமிடத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் கிரீக் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து
தங்களுக்கு பின்னிரவு 1.10 மணியளவில் தகவல் கிடைத்ததாக உலு
பேராக் பொது தற்காப்பு படையின் மாவட்ட நடவடிக்கை மையம்
அறிக்கை ஒன்றில் கூறியது.
இச்சம்பவ இடத்தை அடைந்த போது அங்கு சாலை விபத்து
நிகழ்ந்துள்ளதையும் பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி அந்த
பேருந்து கவிழ்ந்து கிடப்பதையும் மீட்புப் பணியாளர்கள் கண்டனர் என
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் 48 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் இருவர் மருத்துவமனையில் மரணமடைந்தனர். மேலும் நால்வர் காயங்களுக்குள்ளாகினர் என்று அம்மையம் குறிப்பிட்டது.
இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த பேருந்து உப்ஸி பல்கலைக்கழக
மாணவர்களை திரங்கானு மாநிலத்தின் ஜெர்தேயிலிருந்து தஞ்சோங்
மாலிம் கொண்டுச் சென்றது தொடக்க கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த விபத்து குறித்து கருத்துரைத்த பேராக் மாநில
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடோன்,
இவ்விபத்து நிகழ்ந்த சமயத்தில் பெரேடுவா அல்ஸா கார் அதே தடத்தில் அதாவது கிளந்தான் மாநிலத்தின் ஜெலியில் இருந்து கிரீக் சென்று
கொண்டிருந்ததாகச் சொன்னார்.
இந்த விபத்தின் காரணமாக அந்த பேருந்து கவிழ்ந்த வேளையில்
பெரேடுவா அல்ஸா வாகனம் கால்வாயில் விழுந்தது. இவ்விபத்தில்
மொத்தம் 48 பேர் பாதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
சில பயணிகள் சொந்தமாகப் பேருந்துவிலிருந்து வெளியேறினர். சிலர்
விபத்தின் தாக்கத்தால் வெளியே வீசியெறிப்பட்டனர். மேலும் சிலர்
பேருந்துவில் சிக்கிக் கொண்டனர் என்றார் அவர்.


