இஸ்தான்புல், ஜூன் 9 - பட்டினியால் வாடும் காஸா மக்கள் உதவி விநியோக மையத்தில் உணவு பெற முயன்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.
மனிதாபிமான உதவி என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளை ராஃபாவில் நிறுவியுள்ள ஒரு விநியோக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் பிழைத்த பாலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தை விவரித்ததாக அந்த பணி நிறுவனம் ஓர் அறிக்கையில் கூறியது.
பசித்திருக்கும் பாலஸ்தீனியர்கள் உணவுக்காக உதவி மையம் என்று கூறப்படும் விநியோக மையத்தில் இஸ்ரேலியப் படைகளின் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தாக்குதலில் இருந்து தப்பிய அவர்களில் பலர் உணவின்றி வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது.
காஸா மக்களுக்குப் பாதுகாப்பான உதவி விநியோகத்தை மீண்டும் தொடங்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்திய அப்பணி மையம், அது பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் உட்பட ஐ.நா. நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவிலான மனிதாபிமான உதவி என்ற பெயரில் நிறுவப்பட்ட விநியோக மண்டலத்தின் மீது இஸ்ரேலிய இராணுவம் மே 27 முதல் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் நிறுவிய "இடைவெளி மண்டலத்தில்" விநியோக இடத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீதும் இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின.
காஸாவில் உள்ள ஊடக அலுவலகத்தின் தரவுகளின்படி மே 27 முதல் ஜூன் 6 வரை இஸ்ரேலியப் படைகள் விநியோக மையங்களில் இருந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல்களை நடத்தி 110 பேரைக் கொன்றன. இதில் மேலும் 583 பேர் காயமடைந்துள்ளனர்.


