பாப்பார், ஜூன் 9 - இரும்பு கம்பியைப் பயன்படுத்தி மாம்பழத்தை பறிக்க முயன்ற 42 வயது ஆடவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இத்துயரச் சம்பவம் இங்குள்ள பம்பங்கான் கிராமத்தில் நேற்று நிகழ்ந்தது.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.01 மணிக்கு தொலைபேசி வழியாக தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு உறுப்பினர்கள் ஏழு நிமிடத்தில் சம்பவ இடத்தை அடைந்ததாகப் பாப்பார் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்தின் தலைவர் ரோஸ்லான் ஒஸ்மான் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்நபர் மா மரத்தில் ஏறி இரும்பு கம்பியைப் பயன்படுத்தி பழத்தை குத்தி பறிக்க முயன்றது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த இரும்பு கம்பி அருகிலுள்ள மின்சார கேபிளில் பட்டதால் அவர் மின் தாக்குதலுக்குள்ளாகி மரத்திலேயே மயக்கமடைந்தார் என்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
மின் விநியோகத்தை பிறகு சபா மின்சார நிறுவனம் துண்டித்த பின்
மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தீயணைப்பு வீரர்கள் ஏணிகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவரை கீழே இறக்கியதாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து
மேல் நடவடிக்கைக்காக அவரது உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


