கோலக் கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன இருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, கணவன்-மனைவி என்று நம்பப்படும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடரும் என்று சிலாங்கூர் மாநில கடல்சார் இயக்குநர் கேப்டன் அப்துல் முஹைமின் முஹம்மது சாலே தெரிவித்தார்.
மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவு சக நிறுவனங்களுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை தொடரும் என்று பெரித்தா ஹரியானிடம் அவர் கூறினார்.
நேற்று மாலை பாதிக்கப்பட்ட இருவரும் பழுதுபார்க்கப்பட்ட படகை சோதனைக்காக ஓட்டிச் சென்றதாக நம்பப்படுவதாக அப்துல் முஹைமின் தெரிவித்தார்.
இதற்கிடையில், படகு கவிழ்ந்த சம்பவத்தில் இறந்த மூன்று வயது சிறுவன் உட்பட மூன்று நபர்களின் உடல்கள் இன்று தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹரியான் மெட்ரோ தெரிவித்தது.
நேற்று, போர்ட் கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் கடல்பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அவர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் பலியானதாக ஊடகங்கள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
மாலை 5.00 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது மூன்று முதல் 50 வயதுக்குட்பட்ட ஆறு உள்ளூர் நபர்கள் படகில் இருந்தனர். இதில் இரண்டு பேர் கணவன்-மனைவி என நம்பப்படுகிறது. அவர்களில் ஒருவர் மீனவர்களால் மீட்கப்பட்டார்.


