கோலாலம்பூர், ஜூன் 7- ஹஜ்ஜூப் பெருநாள் தினமான இன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையின் கோம்பாக் டோல் சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கை இன்று காலை சற்று அதிகரித்து காணப்பட்டது.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (பிளஸ்), கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையான எல்பிடி 1, எல்பிடி 2 மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள அனைத்து டோல் சாவடிகளிலும் போக்குவரத்து சீராக இருப்பதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
போக்குவரத்து சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக பிளஸ் நெடுஞ்சாலையில் மொத்தம் 30 இடங்களில் ஸ்மார்ட் தடங்கள் இன்று செயல்படுத்தப்பட்டன.
பொதுமக்கள் சமீபத்திய போக்குவரத்துத் தகவல்களை கட்டணமில்லா PLUSLine 1-800-88-0000 அல்லது LLM 1-800-88-7752 மூலமாகவும், @plustrafik மற்றும் @llmtrafik என்ற X பக்கங்கள் மூலமாகவும் பெறலாம்.
இதற்கிடையில், கிளந்தான் மாநிலத்தில் இரு மாநில எல்லை வாயில்களில், அதாவது பகாங் வழியாக குவா மூசாங்-கோல லிப்பிஸ் மற்றும் திரெங்கானு வழியாக பாசீர் பூத்தே வழியாக செல்லும் சாலையில் காலை 9 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராக இருந்தது.
கிளந்தான்-திரங்கானு எல்லை வாயிலில் போக்குவரத்து வழக்கம் போல் சீராக இருந்ததாக பாசீர் பூத்தே மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷய்சுல் ரிசால் ஜக்காரியா தெரிவித்தார்.


