கிள்ளான், ஜூன் 7 -- தாங்கள் குடியிருக்கும் பகுதியில் பள்ளிவாசலையொட்டிய நான்கு மாடி கட்டிடத்தில் இறந்தவர்களின் அஸ்தியை வைக்கும் மாடம் அமைக்கப்படுவது குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவிடம் ஆட்சேப மனுவை சமர்ப்பிப்பது குறித்து கம்போங் ராஜா ஊடா குடியிருப்பாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கிராமத்தில் உள்ள 5,000 குடியிருப்பாளர்களில் பெரும்பாலோர் இந்த நிர்மாணிப்புத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்று கம்போங் ராஜா ஊடா குழுவின் தலைவர் அசார் இப்ராஹிம் கூறினார்.
இந்தத் திட்டம் குறித்து குடியிருப்பாளர்களுடன் விவாதிக்கப்படவில்லை என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இது குறித்து தங்களுக்குத் தெரியவந்தது என்றும் அவர் சொன்னார்.
தகனச் செயல்முறையிலிருந்து உருவாகும் அஸ்தியால் கிராமம் மாசுபடக்கூடும் என்று பல குடியிருப்பாளர்கள் கவலைப்படுகிறார்கள். குறிப்பாக அந்த இடத்திலிருந்து 10 மீட்டருக்கும் குறைவான தொலைவில் வீடுகள் உள்ளன என்று போர்ட் கிள்ளான், பெர்சியாரான் ராஜா முடா மூசாவில் நேற்று நடைபெற்ற அமைதி மறியலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த மறியலில் டஜன் கணக்கான கிராமவாசிகள் கலந்து கொண்டு அந்த கட்டுமானத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒரு ஹெக்டர் பரப்பளவிலான தனியார் நிலத்தில் கட்டப்படவுள்ள இந்தத் திட்டம் குறித்து குடியிருப்பாளர்கள் 300க்கும் மேற்பட்ட ஆட்சேப மனுக்களை கிள்ளான் அரச மாநகர் மன்றத்திடம் இணையம் வழி சமர்ப்பித்துள்ளதாக அசார் கூறினார்.
குடியிருப்பாளர்கள், குறிப்பாக முஸ்லிம்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்த அஸ்தி மாட கட்டுமானத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராமவாசிகள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.


