ஷா ஆலம், ஜூன் 7- லெம்பா சுபாங்1 மக்கள் வீட்டுவசதி திட்டத்தில் (பி.பி.ஆர்.) பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 37.4 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் அமைச்சு, பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற அலுவலகம் ஆகியவறறின் ஏற்பாட்டிலான இந்த நிதி ஏப்ரல் 29 ஆம் தேதி அங்கீகரிக்கப் பட்டதாக லீ சியான் சுங் கூறினார்.
இதில் 20 லட்சம் வெள்ளி வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சினால் படிப்படியாக வழங்கப்படும். இவ்வாண்டு 10 லட்சம் வெள்ளியும் 2026ஆம் ஆண்டில் 10 லட்சம் வெள்ளியும் அடங்கும்.
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் மற்றும் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற அலுவலகம் எஞ்சிய 17.4 லட்சம் வெள்ளிக்கு பொறுப்பேற்றுள்ளன மக்களின் நம்பிக்கையை வெளிப்படையாக நிறைவேற்றுவதற்கு ஏற்ப அனைத்து பராமரிப்பு செயல்முறைகளும் சீராக நடப்பதை நான் உறுதி செய்வேன் என்று லீ சியான் சுங் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பி.பி.ஆர். குடியிருப்பில் அடிக்கடி ஏற்படும் மின்தூக்கி பழுதடைதல் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சேர்ந்து நீண்டகால தீர்வைக் காண தனது தரப்பு உறுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
குடியிருப்பாளர்கள் இன்னும் பிற சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் உணர்கிறேன். அவற்றில் அடிக்கடி பழுதடையும் மின்தூக்கி பிரச்சனையும் அடங்கும்.
மத்திய அரசு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் நாம் மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான வீட்டுப் பகுதிகளை கொண்டிருக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் மேலும் சொன்னார்.


