அங்காரா, ஜூன் 7- காஸாவிலுள்ள உள்ள அல்-அஹ்லி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் உள்ள ஒரு ஊடக கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீன புகைப்பட நிருபர் உயிரிழந்தார். இதனுடன் சேர்த்து இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
அந்த கூடாரம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் காயமடைந்தனர் என்று கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ வட்டாரங்கள் கூறின. கொல்லப்பட்டவர்களில் புகைப்பட பத்திரிகையாளர் அஹ்மத் கல்ஜாவும் ஒருவராவார் என கூறப்பட்டது.
கல்ஜாவின் மரணத்துடன் சேர்த்து 2023 அக்டோபர் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 226ஆக உயர்ந்துள்ளது என்று காஸாவில் உள்ள அரசு ஊடக அலுவலகம் கூறியது.
அந்த எண்ணிக்கையில் 30 பெண் பத்திரிகையாளர்களும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளரும் அடங்குவர்.
காஸா பகுதியில் "உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நீடித்த போர் நிறுத்தம்" வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் நகல் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.


