கோலாலம்பூர், ஜூன் 7- மாற்றுத் திறனாளிப் பெண்ணை பாலியல் ரீதியாக
துன்புறுத்தியதாக தையல்காரர் ஒருவர் மீது அம்பாங் செஷன்ஸ்
நீதிமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி நுருளிஸ்வான் அகமது ஜூபிர் முன்னிலையில் தமக்கு எதிராக
கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை முகமது அரிப் ஜூல்பிகார் அப்துல்
ரசாக் (வயது 25) என்ற ஆடவர் மறுத்து விசாரணை கோரினார்.
பதினேழு வயதான அந்த மாற்றுத் திறனாளி பெண்ணை கடந்த மே
மாதம் மாலை 6.30 மணியளவில் தாமான் கிராமாட் தொழில்திறன்
பயிற்சி மையத்தில் உள்ள கழிப்பறையில் மானபங்கப் படுத்தியதாக அவர்
மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை
அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 354வது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என நிபந்தனை
விதிக்கவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நோர்ஹிடாயா அப்துல்லா சானி
நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
தனது கட்சிக்காரர் தையல்காரராக வேலை செய்வது வருவதோடு
குடும்பத்தை பராமரிக்கும் பொறுப்பிலும் உள்ளதால் குறைந்த பட்ச ஜாமீன்
தொகையை நிர்ணயிக்கும்படி அவரின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்
லிங்கேஸ்வரன் சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
அரசுத் தரப்பு பரிந்துரைத்த கூடுதல் நிபந்தனைகளோடு 4,000 வெள்ளி
ஜாமீனில் குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி
வழக்கு விசாரணையை வரும் ஜூலை மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்தி
வைத்தார்.


