செய்தி ஆர்.ராஜா
கிள்ளான், ஜூன் 6- ஏட்டுக் கல்வி எட்டாக் கனியாகி போனவர்கள் குறிப்பாக, எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்யாதவர்கள் எதிர்காலம் என்று எதுவுமில்லை என இனியும் சோர்ந்து போகவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அத்தகைய மாணவர்களுக்கு கரம் கொடுக்கவும் கைத் தொழிலைக் கற்றுக் கொடுக்கவும் எண்ணற்ற வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
எஸ்.பி.எம். தேர்வில் தோற்றால் என்ன, கிராப் ஓட்டுநனராக, தொழிற்சாலை ஊழியராக, பொருள் விநியோகிப்பாளராக காலத்தை ஓடி விடலாம் என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து விடுபட்டு தொழில்கல்வியைப் பெற்று வாழ்க்கைத் தகுதியிலும் வருமானத்திலும் பட்டதாரி மாணவர்களுக்கு இணையான இடத்தை பிடிக்க வேண்டும் என்ற வேட்கை நமது மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது பெரிதும் போற்றத்தக்க வகையில் உள்ளது.
செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் தொழில்திறன் (திவேட்) தொடர்பான கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் கலந்து கொண்டது இந்த மாற்றத்திற்கான சான்றாக விளங்குகிறது.
அந்த மாணவர்களில் சிலரைப் பேட்டி கண்டபோது அவர்களின் கண்களில் மாற்றத்திற்கான வேட்கை தென்பட்டது. ஒளிமயமான எதிர்காலத்திற்கான வழியும் புலப்பட்டது.
ஹரிவர்மன் பால முருகன்
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை முடித்த நிலையில் கணினி அறிவியல் அல்லது ஆட்டோமோட்டிவ் துறையில் கல்வியைத் தொடர தாம் நோக்கம் கொண்டுள்ளதாக கிள்ளானைச் சேர்ந்த ஹரிவர்மன் பால முருகன் (வயது 17) கூறினார்.
இந்த கல்வியைப் பெறுவது தொடர்பில் தாம் இங்கு பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பிரநிதிகளிடம் இந்த கலந்துரையாடி தெளிவான விளக்கத்தைப் பெற்றதாக அவர் சொன்னார்.
எனக்கு விருப்பமானத் துறையில் பயிற்சிப் பெறுவதற்கான வாய்ப்புகளை பல கல்லூரிகள் வழங்குவதை இங்கு வந்தபோது நான் அறிந்து கொண்டேன். இது குறித்து நன்கு ஆராய்ந்து இறுதி முடிவை எடுப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.
![]()
நிவேதன் பத்துமலை
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வை எழுதிய தனக்கு போலீஸ் துறையில் சேர்வது இலட்சியமாக இருந்தாலும் கைத்தொழில் குறிப்பாக வாகன பழுதுபார்ப்புத் துறை பிடித்த ஒன்றாக உள்ளதாக ஷா ஆலம், செக்சன் 25ஐ சேர்ந்த நிவேதன் பத்துமலை (வயது 18) தெரிவித்தார்.
காவல் துறையில் சேர்வதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் அதேவேளையில் தொழில்திறன் கல்வியில் சான்றிதழ் அல்லது டிப்ளோமா பெறுவதற்கான முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதுதான் திவேட் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளதைக் தாம் கண்டு கொண்டதாகக் கூறிய அவர், எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பான அடைவு நிலையை பெறாத மாணவர்கள் இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக அடுத்து என்ன செய்வது என்பது குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
ரச்சித்தா ஜெயசீலன்
![]()
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் சராசரி தேர்ச்சியைப் பெற்ற காரணத்தால் அந்த கல்வித் தகுதிக்கு ஏற்ற தொழில்திறன் கல்வி வாய்ப்புகளை கண்டறிவதற்காக தாம் இந்த கண்காட்சிக்கு வந்ததாக கிள்ளானைச் சேர்ந்த ரச்சித்தா ஜெயசீலன் (வயது 18) தெரிவித்தார்.
தமக்கு ஆடை வடிவமைப்புத் துறையில் ஆர்வம் உள்ளதாகவும் அனைத்துக் கல்லூரிகளும் அந்த கல்வி வாய்ப்பை வழங்குவதை இங்கு வந்த போது தாம் அறிந்து கொண்ட வேளையில் ஆற அமர யோசித்து எந்த கல்லூரியில் சேர்வது என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் சொன்னார்.

