கோலால திரங்கானு, ஜூன் 6 - ஹரி ராயா ஐடிலாடாவை முன்னிட்டு திரங்கானு சாலை போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையில் 8 ஆடம்பர வாகனங்கள் உட்பட 25 வாகனங்கள் மற்றும் ஒரு சரக்கு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன உரிமம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனங்கள் ஓட்டியது மற்றும் இதர சில போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதன் தொடர்பில் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக திரங்கானு சாலை போக்குவரத்துத் துறையின் இயக்குனர் முகமட் ஷம்ரி சமியோன் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் மேற்கொண்ட அந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பற்ற டயர்களுடன் நைட்ரோஜன் திரவத்தை ஏற்றிச் சென்ற சரக்கு லோரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
30 வயதுடைய அந்த லோரி ஓட்டுனர் கோலா நெருஸ், கம்போங் பாடாங் நெனாசில் காலை மணி 7.20 அளவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின்போது 6,006 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. பல்வேறு குற்றங்களுக்காக 529 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு 746 சம்மன்கள் வழங்கப்பட்டதாக முகமட் ஷம்ரி கூறினார்.


