கோலாலம்பூர், ஜூன் 6 - அடுக்குமாடி குடியிருப்பின் 30வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியிலிருந்து விழுந்து நான்கு வயது பாலகன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இத்துயரச் சம்பவம் புக்கிட் ஜாலிலில் நேற்று காலை 11.17 மணியளவில் நிகழ்ந்ததாக செராஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடில் போல்ஹாசன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து நபர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்ததாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவரின் உடல் சான்சலர் துவாங்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை சித்தரிக்கும் 37 வினாடி காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு குடும்ப உறுப்பினர் என்று நம்பப்படும் ஒருவர் குழந்தையின் அருகில் கண்ணீர் மல்க நிற்பதையும் குழந்தையின் உடல் துணியால் மூடப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.


