புத்ராஜெயா, ஜூன் 6 - உணவு மற்றும் பானத் துறையில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு வணிகர்கள் சிறப்பு அனுமதி பெறாமல் மானிய விலையில் கிடைக்கும் திரவமய பெட்ரோலிய எரிவாயு (எல.பி.ஜி.) சிலிண்டர்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த 2021ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (பி.பி கே பி.) தொடர்பான திருத்தங்கள் அக்டோபர் மாதம் இறுதி செய்யப்படும் வரை இந்த அனுமதி அமலில் இருக்கும்.
சம்பந்தப்பட்ட வணிகர்கள் சிறப்பு அனுமதி பெறாமல் தொடர்ந்து மானிய விலையில் கிடைக்கும் திரவமயப் பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தலாம்.
இந்த விதிமுறை மாற்றக் காலத்தில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமதுஅலி கூறினார்.
விதிமுறையில் திருத்தங்கள் இறுதி செய்யப்படாத வரை அனுமதி இல்லாமல் வழக்கம் போல் மானிய விலையில் சமையல் எரிவாயுவை பெற அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவர் நேற்று தனது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி நடைமுறைக்கு வந்த ஒழுங்குமுறையைத் திருத்துவதற்கான அமைச்சின் பரிந்துரையை நேற்று கூடிய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திருத்தம் சிறு மற்றும் குறு அளவிலான உணவு மற்றும் பான வர்த்தகர்களின் தேவையை கணக்கில் எடுத்துக்கொள்வதோடு இணக்கம் மற்றும் அமலாக்கத்தின் அடிப்படையில் சட்ட தெளிவை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது அவர் கூறினார்.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஓப்ஸ் காசாக் இயக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடைந்தவுடன் திருத்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.


