புத்ராஜெயா, ஜூன் 6 - ஆண்டுக்கு 500,000 ரிங்கிட்டுக்கும் கீழ் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு e-invoice முறை அமுலாக்கத்திலிருந்து தற்போதைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) அறிவித்துள்ளது.
அதே சமயம் 1 மில்லியன் முதல் 5 மில்லியன் ரிங்கிட் வரையில் வருமானம் பெறும் வர்த்தகங்களுக்கு, அடுத்தாண்டு ஜனவரி 1 வரை இத்திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அறிவித்துள்ளது.
மேலும், இவ்வேளையில் 1 மில்லியன் வரையில் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் 2026 ஜூலை 1 முதல் இந்த e-invoice முறையை பயன்படுத்தியாக வேண்டும்.
குறு, சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு இருக்கும் மாதாந்திர கடப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உள்நாட்டு வருவாய் வாரியம் விளக்கியது.
எனினும், 5 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 25 மில்லியன் ரிங்கிட் வரையில் ஆண்டு வருமானம் பெறும் நிறுவனங்கள், எதிர்வரும் ஜூலை 1 முதல் e-invoice முறையைப் பயன்படுத்தும்.
இக்காலக் கட்டத்தில், e-invoice விதிமுறைகளைப் பின்பற்றும் பட்சத்தில், 1967 வருமான வரி சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்றும் LHDN உத்தரவாதம் அளித்தது.
ஆனால், அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் 10,000 ரிங்கிட்டுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நிறுவனங்கள் கட்டாயம் e-invoice வெளியிட வேண்டும்.


