கோலாலம்பூர், ஜூன் 6 - ஹரி ராயா ஐடிலாடா பெருநாள் விடுமுறையை பயன்படுத்தி கொண்டு மக்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், வடக்கு-தெற்கு விரைவுச் சாலை (PLUS) மற்றும் கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலை (KLK) ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், கிழக்கு விரைவுச்சாலையில் வாகனங்கள் அதிகரிப்பதால், கோம்பாக் டோல் பிளாசா போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், திரங்கானு அஜில் பகுதியில் சிறிது தாமதங்கள் ஏற்பட்டதைத் தவிர, காராக்கில் இருந்து திரங்கானு நோக்கிய போக்குவரத்து ஓட்டம் இதுவரை சீராக உள்ளது என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள், தங்களின் பயணத்தை முன்னதாக திட்டமிடுவது சாலச் சிறந்தது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


