காஸா, ஜூன் 6 - போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்கும் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிப்பதற்கும் ஷிவாலஸ் நைட் 3 நடவடிக்கையின் கீழ் காஸா தீபகற்பத்தில் மனிதாபிமான உதவி வாகன அணி நுழைவதை ஐக்கிய அரபு சிற்றரசு (யுஏஇ) அறிவித்தது.
சுமார் 13 லட்சம் பயனாளிகளுக்கு உதவும் நோக்கிலான இந்த வாகன அணி 1,039 டன் உணவுப் பொருட்களை கொண்டு சென்றதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.
அடிப்படைத் தேவைகள் பற்றாக்குறையால் கடுமையமான மனிதாபிமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் காஸா குடியிருப்பாளர்களுக்கு ஐக்கிய அரபு சிற்றரசு தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவின் ஒரு பகுதியாக இந்த விநியோகம் உள்ளது.
கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் உதவிகள் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் விநியோகிக்கப்படுவதை ஷிவால்ரஸ் நைட் 3 நடவடிக்கை உறுதி செய்கிறது.
மனிதாபிமான சவால்களை எதிர்கொண்ட போதிலும் ஐக்கிய அரபு சிற்றரசு காசாவுக்கு உணவு உதவிகளை தொடர்ந்து விநியோகித்து வருகிறது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அகதிகளின் குடும்பங்களுக்கு ரொட்டி மற்றும் அடிப்படை உணவு விநியோகம் தொடரப்படுவதை உறுதி செய்வதற்காக ஐக்கிய அரபு சிற்றரசு 31 பேக்கரிகளுக்கு ஆதரவளித்துள்ளது.
மிகவும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் காஸாவுக்கு ஐக்கிய அரபு சிற்றரசு உதவிகளைத் தொடர்ந்து வழங்குவது, பாலஸ்தீன மக்களை ஆதரிப்பதில் அந்நாட்டின் உறுதியான மற்றும் நிலையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்பதை ஷிவால்ரஸ் நைட் 3 நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.


