செர்டாங், ஜூன் 6 - கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மே மாதம் வரை முடிக்கப்பட்ட 173 விசாரணை அறிக்கைகள் வாயிலாக பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், கடத்தப்பட்ட மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் சம்பந்தப்பட்ட 56 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வழக்கு ஆதாரப் பொருள்களை செர்டாங் மாவட்டக் காவல்துறை அழித்தது.
தேசிய போலீஸ் படைத் தலைவரின் நிரந்தர உத்தரவு (PTKPN D207) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சட்டம் 593) 407ஏ பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் 164,246 வழக்கு ஆதாரப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாரிட் அகமது தெரிவித்தார்.
அழிக்கப்பட்ட பொருள்களில் 2,934 பிட்காயின் இயந்திரங்கள், 119,094 கடத்தப்பட்ட மதுபான பாட்டில்கள் மற்றும் 42,218 பெட்டி சிகரெட்டுகள் ஆகியவையும் அடங்கும் என்று அவர் செர்டாங் மாவட்ட காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


