ஷா ஆலம், ஜூன் 6 - கோல லங்காட், ஸ்ரீ சீடிங் பிரதான சாலையில் நேற்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் வாகன ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
பந்திங் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் அதிகாலை 6.30 மணியளவில் யமாஹா மோட்டார் சைக்கிளில் ரிம்பாயு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வாகனத்துடன் உரசியதாக கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்ரெண்டன் முகமது அக்மல்ரிசல் ரட்ஸி தெரிவித்தார்.
இந்த மோதல் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிர் தடத்தில் தூக்கியெறியப்பட்டதாக அவர் கூறினார்.
லோரி ஓட்டுநராக பணிபுரிந்த பாதிக்கப்பட்ட நபர் காலை 8.00 மணியளவில் பந்திங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரை கோல லங்காட் மாவட்ட காவல் தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவில் ஆஜராகி இவ்விபத்து தொடர்பில் புகார் அளிக்குமாறு முகமது அக்மல்ரிசால் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41 (1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.


