கோலா கிராய், ஜூன் 5 - இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் வரையில் கிளந்தானில் அமைந்துள்ள கோலா கிராய் பகுதியில் வனவிலங்கு அச்சுறுத்தல்கள் தொடர்பில் 28 புகார்கள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இரண்டு புகார்கள் மட்டுமே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் பெரும்பாலான சம்பவங்கள் காட்டு யானைகள் மற்றும் குரங்குகளின் அச்சுறுத்தல்களை உட்படுத்தியது என்று கோலா கிராய் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்ரின்டென்டன் மஸ்லான் மாமாட் தெரிவித்தார்.
மேற்கண்ட விவகாரம் தொடர்பில் மாணிக் உராய் காவல் நிலையத்தில் 11 புகார்களும், கோலா கிராய் காவல் நிலையத்தில் 10 புகார்களும், லாலோ காவல் நிலையத்தில் 6 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மஸ்லான் கூறினார்.
"இதனால், பொதுமக்கள் தங்கள் குப்பைகளையும் உணவுக் கழிவுகளையும் சரியான முறையில் அப்புறப்படுத்த அறிவுறுத்துப்பட்டுள்ளது.
"மேலும், குரங்குகளுக்கு கண்மூடித்தனமாக உணவளிக்காதீர்கள், ஏனெனில் அவை கொடுக்கப்படும் உணவைச் சார்ந்து இருக்க வழிவகுக்கும். மேலும், அவை உணவுக்காக மக்களின் வீடுகளுக்குள் செல்ல வாய்ப்புண்டு," என்று அவர் மேலும் கூறினார்.
பெர்னாமா


