கோலாலம்பூர், ஜூன் 5 - தலைநகர் பங்சாரில் உள்ள லோரோங் மாரோப் பகுதியில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் நேற்று கண்டு பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பிரஜை என நம்பப்படும் ஆடவர் ஒருவரின் உடல் மீது இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
நடைமுறைகள் முடிந்ததும் பிரேதப் பரிசோதனை முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாமுட் தெரிவித்தார்.
அந்த ஆடவரின் உடலை அடையாளம் காண அவரின் குடும்பத்தினர் பிரிட்டனிலிருந்து மலேசியா வந்துள்ளனர் என்று அவர் பெர்னாமா தொடர்பு கொண்டபோது கூறினார்.
இருபத்தைந்து வயதான ஜோர்டான் ஜான்சன்-டாய்ல் என்ற அந்த ஆடவர் கடந்த மே மாதம் 27ஆம் தேதி பங்சார் பகுதியில் கடைசியாகக் காணப்பட்டதாகவும் அதற் பின்னர் அவர் காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.
கைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள இயலாமல் போனதைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதை அவரது குடும்பத்தினர் உணர்ந்தனர். மேலும் அவரது சமூக ஊடகக் கணக்குகளும் செயலிழந்து விட்டன.
அத்த கட்டுமான தளத்திலுள்ள மினதூக்கியின் கீழ் மட்டப் பகுதியில் ஆடைகள் களையப்பட்ட நிலையில் அவ்வாடவரின் உடல் தலைக்குப்புறக் கிடந்தது.
— பெர்னாமா


