பட்டர்வொர்த், ஜூன் 5 - இவ்வாண்டு மார்ச் 4 ஆம் தேதி பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணப் பெட்டியிலிருந்து 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ளவை என நம்பப்படும் 29 பாக்கெட் கஞ்சா இலைகளை அரச மலேசிய சுங்கத் துறை கண்டுபிடித்தது.
அடையாளம் காணப்படாத அந்த பயணப் பெட்டி விமான நிலையத்தில் உள்ள கேரோசல் ஏ-பயணப் பெட்டி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில சுங்கத் துறை இயக்குநர் ரோஹைசாட் அலி தெரிவித்தார்.
அந்த பயணப் பெட்டியை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் உலர்ந்த பொருள்கள் கொண்ட 29 பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 16,210 கிராம் எடை கொண்ட அந்த போதைப் பொருளின் சந்தை மதிப்பு 15 லட்சம் வெள்ளியாகும் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 16ஆம் போஸ் மலேசியா பெர்ஹாட்டின் கூரியர் மெயில் போஸ்டில் பார்சல்களை சோதனை செய்தபோது அதில் 2,236 கிராம் எடை கொண்ட வெ.219,128 மதிப்புள்ள கஞ்சா பூக்கள் என சந்தேகிக்கப்படும் உலர்ந்த பொருள்கள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பார்சலில் ஒன்பது செட் கேலிச் சித்திர புத்திங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு மலேசியாவிற்கு 'திரும்பிய பார்சல்' என குறிப்பிடப்பட்டிருந்தன என அவர் சொன்னார்.
இந்த வழக்கு தொடர்பில் 1959ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 39பி (1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை இன்னும் நடந்து வருவதாக அவர் கூறினார்.


