ஷா ஆலம், ஜூன் 5 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தானியங்கி காபி விற்பனை இயந்திர முதலீட்டு மோசடி தொடர்பான 101 புகார்களை சிலாங்கூர் காவல்துறை பெற்றுள்ளது. இதில் ஏற்பட்ட மொத்த இழப்பு 67 லட்சம் வெள்ளியாகும்.
அதிக வருமானம் ஈட்டித தருவதாகக் கூறப்படும் தானியங்கி காபி விற்பனை இயந்திர முதலீடு குறித்த சந்தேக நபரின் விரிவான விளக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டது தொடக்கக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் குறித்த விளக்கத்தை நம்பியவர்கள் முதலீட்டுத் திட்டத்தில் இணைந்து சந்தேக நபர் வழங்கிய வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினர்.
முதலீடு முறையானதா என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்கத்தில் தெரியவில்லை. ஆரம்பத்தில், அவர்களுக்கு சிறிதளவு வருமானம் கிடைத்தது. ஆனால் காலப்போக்கில். பணம் செலுத்துவது நிறுத்தப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மோசடி தொடர்பில் தண்டனைச் சட்டப் பிரிவு 420 பிரிவின் கீழ் இநதப் புகார்கள் விசாரிக்கப்படுகின்றன என அவர் சொன்னார்.
விசாரணை ஆவணங்கள் துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மோசடி தொடர்பில் எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்று சட்டத் துளை அலுவலகம் முடிவு செய்துள்ளதாகச் கூறினார்.
முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கு ஏதுவாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டதை எதிர்த்து முதலீட்டு நிறுவனம் மீது சிவில் நடவடிக்கை எடுக்குமாறு புகார்தாரர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
நம்ப முடியாத அளவுக்கு வருமானத்திற்கு உறுதியளிக்கும் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா அல்லது மலேசிய பங்குச் சந்தை ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நிதி செயலிகள் அல்லது தளங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.


