புத்ராஜெயா, ஜூன் 5 - உடனடி மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தை
வலியுறுத்தும் தீர்மானத்தை அமல்படுத்தவதிலும் காஸாவில்
மனிதாபிமான உதவிகளுக்கு எதிரான தடைகளை அகற்றுவதிலும் ஐக்கிய
நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்பு மன்றம் தொடர்ந்து தோல்வி கண்டு
வருவது குறித்து மலேசியா ஆழ்ந்த வருத்தமும் ஏமாற்றமும்
அடைந்துள்ளது.
ஏமாற்றம் அளிக்கும் மற்றும் வருத்தம் தரக்கூடிய வீட்டோ எனப்படும்
ரத்து அதிகாரம் காரணமாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய
மிகபெரிய நெருக்கடியை கையாள்வதில் ஐ.நா.பாதுகாப்பு மன்றம்
தொடர்ந்து தோல்வி கண்டு வருவதாக வெளியுறவு அமைச்சு அறிக்கை
ஒன்றில் கூறியது.
மக்களைக் கொல்வது, இனப்படுகொலை ஆகியவற்றோடு உணவு
விநியோகத்தை தடுப்பதன் மூலம் உயிரைப் பறிப்பதற்கான ஆயுதமாக
பஞ்சத்தை போருக்கான புதிய வகை ஆயுதமாக பயன்படுத்தும்
இஸ்ரேலின் நடவடிக்கையை தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதாக
மலேசியா குறிப்பிட்டது.
ஐ.நா.பாதுகாப்பு மன்றத்தின் தோல்வி ஒருபுறமிருக்க, மத்திய கிழக்கில்
அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை அனைத்துலக சமூகம்
தொடர வேண்டும் என்றும் விஸ்மா புத்ரா என அழைக்கப்படும்
வெளியறவு அமைச்சு வலியுறுத்தியது.
கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்ட 1967ஆம் ஆண்டிற்கு
முந்தைய எல்லையின் அடிப்படையில் சுதந்திர மற்றும் இறையாண்மை
கொண்ட பாலஸ்தீனத்தை உருவாக்குவது மட்டுமே மத்திய கிழக்கில்
அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதை இஸ்ரேல் உணர
வேண்டும் என்றும் அது கூறியது.
அனைத்துலக சமூகத்தின் தொடர்ச்சியான ஆதரவுக்கேற்ப மலேசியாவின்
நிலையான அணுகுமுறையாகவும் கோட்பாடாகவும் இது விளங்குகிறது
என விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.
காஸா தீபகற்பத்தில் விரைவான, நிபந்தனையற்ற மற்றும் உடனடி போர்
நிறுத்தத்தை வலியுறுத்தும் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தின் தீர்மானத்தை
அமெரிக்கா தனது ரத்து அதிகாரம் மூலம் நிராகரித்தது.


