பெங்களூரு, ஜூன் 5 - IPL கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக கோப்பையை வென்ற RCB எனப்படும் Royal Challengers Bengaluru அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்ற இவ்விழாவில் கட்டுக்கடங்காத இரசிகர்கள் கூட்டம் திரண்டது.
அதனால், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 6 பெண்கள் உட்பட 11 பேர் அதில் உயிரிழந்தனர்.
IPL எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதன்முறையாக வீராட் கோலியின் RCB அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அதனை தொடர்ந்து, வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு, சின்னசாமி மைதானத்தில் நேற்று மாலை 6 மணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
பாராட்டு விழாவில் பங்கேற்க, 'பாஸ்' அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மைதானத்திற்குள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பாஸ் வாங்காத இரசிகர்களும் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல்துறையினரால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி நுழைவாயில் கதவை, மைதான ஊழியர்கள் திறந்து விட்டனர்.
அப்போது முண்டியடித்துக் கொண்டு இரசிகர்கள் உள்ளே சென்றதால் ஒருவர் மீது ஒருவர் தவறி விழுந்தனர். இதனால், கீழே விழுந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 13 வயது சிறுமி உள்ளிட்ட 11 பேர் மரணமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கர்நாடகா அரசாங்கம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அறிவித்தது. இச்சம்பவம் குறித்த உடனடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


