பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 - தேசிய இதய சிகிச்சைக் கழகத்தில் (ஐ.ஜே.என்.) அண்மையில் சிகிச்சை பெற்ற புருணை சுல்தான் சுல்தான் ஹஸனால் போல்கியா
அக்கழகத்தின் பராமரிப்பு தரம் மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தைப் பெரிதும் பாராட்டியதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) பண்டார் ஶ்ரீ பெகாவானுக்குப் புறப்படும் முன் ஐ.ஜே.என்.இல் சுல்தானைச் பிரதமர் அன்வார் சந்தித்தார்.
அச்சந்திப்பின்போது ஐ.ஜே.என். மருத்துவக் குழுவின் தொழில்முறை மற்றும் செயல்திறனுக்கு சுல்தான் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்ததாக அவர் கூறினார்.
உலகத்தரம் வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு தமக்கு புதியதல்ல என்றாலும் ஐ.ஜே.என்.இல் உள்ள மருத்துவர்களின் சிறப்பு மற்றும் அர்ப்பணிப்பினால் தாம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக சுல்தான் கூறினார் என்று என்று அன்வார் குறிப்பிட்டார்.
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற துறைகள் மெத்தனப் போக்கிலிருந்து விடுபட்டு தரத்தை தொடர்ந்து உயர்த்துவதற்கான உந்துதலாக அமைய இதுபோன்ற பாராட்டுகள் பெரிதும் உதவும் என்று மேலும் கூறினார்.
நாம் நமது பலத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் மற்ற நாடுகளுடன் ஆரோக்கியமாகப் போட்டியிட கடுமையாகப் பாடுபட வேண்டும். இந்த அங்கீகாரம் நம்மை தொடர்ந்து முன்னேற ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மே 26 மற்றும் மே 27 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக 78 வயதான சுல்தான் அஸானால் போல்கியா மே 25ஆம் தேதி மலேசியா வந்தார்.
சோர்வு காரணமாக கடந்த 27ஆம் தேதி அவர் ஐ.ஜே.என்.-இல் ஓய்வுக்காக அனுமதிக்கப்பட்டார்.


