பெட்டாலிங் ஜெயா, ஜூன் 5 - மலேசியாவில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு தற்போது சுமார் 20 விழுக்காடாக மட்டுமே உள்ளதாக என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
2019-2030 தேசிய போக்குவரத்துக் கொள்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள 40 விழுக்காட்டு இலக்கை விட இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதாக அவர் கூறினார்.
ஆகவே, நாம் விரும்பியபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எவ்வாறு அடைய முடியும் என்பதை உறுதி செய்வது என்பதே எங்கள் சவாலாகும் என்று நேற்று இங்குள்ள மெனாரா பிராசரானாவில் நடைபெற்ற மலேசிய சிவில் அறிஞர்கள் மன்றத்தின் 6வது ஆய்வரங்கிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வரங்கில் "மக்களுக்கான போக்குவரத்து: பொது போக்குவரத்தின் மலிவு, தரம் மற்றும் நிலைத்தன்மையை சமநிலைப்படுத்துதல்" என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
அந்தோணி லோக் தவிர, பிரசாரானா மலேசியா பெர்ஹாட் குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் அசாருடின் மாட் சா மற்றும் மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தின் (யுபிஎம்) துணைவேந்தர் டத்தோ பேராசிரியர் டாக்டர் அகமது ஃபர்ஹான் முகமது சாதுல்லா ஆகியோர் இந்த ஆய்வரங்கின் மற்ற குழு உறுப்பினர்களாவர்.
சாலையிலிருந்து ரயில் வரையிலான முன்னெடுப்பை செயல்படுத்துவது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது நாட்டின் சரக்கு போக்குவரத்து துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் லோக் கூறினார்.
நாங்கள் ரயில் பயன்பாட்டை ஊக்குவிக்கிறோம். ஆகவே தான், கொள்கலன்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு ரயில் சேவையை அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம் என்றார் அவர்.
கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (இ.சி.ஆர்.எல்.) திட்டம் நிறைவடையும் போது கிழக்கு கடற்கரைக்கு பொருட்கள் மற்றும் கொள்கலன்களை கொண்டுச் செல்வதில் தண்டவாளங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இதனால் லோரிகள் போன்ற தரைப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பது குறையும் என்று அவர் கூறினார்.


