கோலாலம்பூர், ஜூன் 5 - தொழிற்சாலை பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதில் பயணித்த 33 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் பண்டார் பாரு பாங்கி, செக்சன் 13, ஜாலான் பி/6 இல் இன்று காலை நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தமது துறைக்கு காலை 6.59 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
முதன்மை தீயணைப்பு அதிகாரி II ரஹமாட் சபாருடின் தலைமையில், பாங்கி தீயணைப்பு நிலையம் மற்றும் காஜாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த மொத்தம் 13 உறுப்பினர்கள் தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட எட்டு பேர் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனை மற்றும் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்களிடம் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
பேருந்தில் இருந்த இதர 11 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


