கோலாலம்பூர், ஜூன் 5 - நிக்கோடின் இரசாயனக் கலவைக் கொண்ட மின்னியல் சிகரெட்டின் பயன்பாட்டை அரசாங்கம் குறிப்பாக சுகாதார அமைச்சு இப்போதே தடை செய்யவிட்டால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் அது சீர்குலைத்து விடும் என சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.
மலேசியாவில் 2016-ஆம் ஆண்டிற்குப் பின்னரே 'வேப்' எனப்படும் மின்னியல் சிகரெட்டுகளின் புழக்கம் தலைதூக்கத் தொடங்கியது.
13 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 17 விழுக்காட்டு மாணவர்களும் பதின்ம வயதினரும் 'வேப்' புகைக்கும் பழக்கத்திற்கு 2017-ஆம் ஆண்டில் அடிமையாகி இருந்ததாகக் சுகாதார அமைச்சு தரவு வெளியிட்டது. ஆனால், இன்றோ அந்த எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.
மின்னியல் சிகரெட் புகைக்கும் பழக்கம் உலகளவில் காணப்பட்டாலும் ஆசியானைப் பொருத்தவரையில் மலேசியாவில் அதற்கு அதிக தளர்வு இருப்பதாகத் தெரிகிறது.
2023-ஆம் ஆண்டில் மட்டும் மின்னியல் சிகரெட் பயன்பாட்டினால் 1,200-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம், WHO தெரிவித்திருந்தது.
அதிலும் ஒவ்வாமை, நச்சு மற்றும் கடுமையான நுரையீரல் பாதிப்பு ஆகியவை முதன்மையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.
மலேசியாவிலும் இந்நிலைமை ஏற்படாமல் இருக்க மின்னியல் சிகரெட் பயன்பாட்டை உடனடியாக முடக்கும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், சில நிறுவனங்கள் மின்னியல் சிகரெட்டுகளின் வடிவத்தையே மாற்றி, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை போலவும் மிட்டாய்கள் வடிவிலும் அதை உருவாக்கி விற்று வருவதையும் யுனேஸ்வரன் கோடிகாட்டினார்.
எனவே, வீட்டில் பிள்ளைகள் பயன்படுத்தும் பொருட்களை பெற்றோர் எப்போதுமே கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
அதேவேளையில், 2023-ஆம் ஆண்டு புகைப்பிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்ட மசோதாவில், GEG எனப்படும் புகைப்பிடிக்காத புதிய தலைமுறையை உருவாக்குவதற்கான பிரிவையும், அரசாங்கம் விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று யுனேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.
பெர்னாமா


