கோலாலம்பூர், ஜூன் 5 - இவ்வாண்டு மே மாதம் 27ஆம் தேத முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் இங்கிலாந்து நாட்டவர் கடைசியாக காணப்பட்ட இடம் பங்சார் என்பதை பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி கூ மஷாரிமான் கூ மாமுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
தன் மகன் காணாமல் போனது தொடர்பில் ஜோர்டான் மைக்கேல் ஜான் ஜான்சன்-டோய்லின் தந்தை கடந்த திங்கட்கிழமை (ஜூன் 2) பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவல் தலைமையகத்தில் செய்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சுற்றி போலீசார் பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
நேற்று மாலை 4.00 மணிக்கு லோரோங் மாரோப்பில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் 30 உறுப்பினகளுடன் நாங்கள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டோம். மாலை 5.00 மணிக்கு ஆடவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இருப்பினும், உடலை அடையாளம் காணும் பணியை மேற்கொள்வதற்கு சிறிது நேரம் பிடிக்கும் என்பதால் இறந்த நபரை இன்னும் எங்களால் அடையாளம் காண முடியவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மிகவும் ஒதுக்குப்புறமாகவும் அணுகுவதற்கு கடினமான பகுதியிலும் இருந்தது. ஆகவே, கண்டெடுக்கப்பட சடலம் காணாமல் போனதாகக் கூறப்படும் நபருடன் தொடர்புடையதா? இல்லையா? என ஊகிக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூ மஷாரிமான் நேற்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கட்டுமான தளத்தில் உள்ள மின் தூக்கியின் தரை தளத்தில் ஆடைகள் கிட்டத்தட்ட களையப்பட்ட நிலையில் வெளிநாட்டு ஆணுடையது என்று நம்பப்படும் உடல் குப்புறக் கிடப்பது கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் உடல் வெளியே கொண்டு வரப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் அடையாளம் காணும் நோக்கங்களுக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு அனுப்பப்பட்டது.


